பல் மருத்துவ துறையில் லேசர் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தாலும் அவை இப்போது தான் பிரபலம் ஆகிக் கொண்டு வருகின்றன. முன்பு போல இல்லாமல் இப்போது பயன்படுந்த்தப்படும் லேசர் மிகவும் பயனுள்ளவை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த லேசர் கதிர்களை பற்றிய பல புனைவுகளும், கட்டுக் கதைகளும் நிறைய இருக்கின்றன. இந்த கட்டுக் கதைகள் லேசரைப் பற்றி ஒரு வித பயத்தை மக்களுக்கு விதைத்துள்ளன. இந்த பயத்தால் அதன் பலன்கள் நிறைய பேருக்கு கிட்டுவது தடை படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். லேசரை பற்றிய முக்கியமான நான்கு கட்டுக்கதைகளை இங்கே ஆராய்கிறோம்.
கட்டுக்கதை-1: லேசர் மருத்துவத்தில் வேகம் குறைவு
இந்த கட்டுக்கதை வந்ததன் காரணம் பழங்காலத்தில் நடந்தவற்றை இன்னும் நினைவில் வைத்திருப்பதால் ஆகும். லேசர் தொழிநுட்பத்தின் ஆரம்ப காலத்தில் பல் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்ட லேசர் மிகவும் மெதுவாகவே வேலை செய்தது. ஆனால் இப்போது அப்படி எல்லாம் இல்லை. அதெல்லாம் பழைய காலம். பல் மருத்துவத்தில் இப்போது பயன்படுத்தப்படும் லேசர் புதிய அலைவரிசையில் உள்ள மிகவும் திறன் வாய்ந்தவை ஆகும். இவை ட்ரில் கருவியின் வேகத்துக்கு இணையாக வேலை செய்வன ஆகும்.
கட்டுக்கதை-2: எல்லா லேசர் பல் மருத்துவமும் மயக்க மருந்து கொடுத்தே செய்யவேண்டியுள்ளது
பல் மருத்துவ முறைகளில் பயன்படுத்தும் லேசர் தொழில்நுட்பத்தால் ஏறக்குறைய 95% மருத்துவத்திற்கு மயக்க மருந்தே வேண்டியது இல்லை. சில சமயங்களில் பல் சிகிச்சைக்கு வருபவர்கள் பயத்தின் காரணமாக மயக்க மருந்து கொடுக்கச் சொல்லி வற்புறுத்துவதுண்டு. மோசமான பயம் இருக்குமேயானால் பல் மருத்துவர்களுக்கு மயக்க மருந்து கொடுப்பதைத் தவிர வேறு வழி இருக்காது. லேசர் தொழிநுட்பத்தில் ஏற்படும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வலியை இல்லாமல் ஆக்கிவிடுவதால் மயக்க மருந்து கொடுக்க வேண்டிய நிலையை இல்லாமல் ஆக்குகின்றன.
கட்டுக்கதை-3: லேசர் கதிர்வீச்சால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்
லேசர் வேகப்படுத்தப்பட்ட ஒளிக்கற்றைகளால் ஆனது. இதற்கும் கதிர்வீச்சிற்கும் தொடர்பில்லை. பொதுவாக சொல்லவேண்டும் என்றால் லேசர் தீங்கு செய்பவை இல்லை. சாதாரண ஒளி நம் உடல் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துமா லேசர் கூட அதையே தான் செயகிறது. தற்காலத்தில் பயன்படுத்தப்படும் லேசர்கள் photo-thermolysis என்ற கோட்பாட்டின்படி வேலை செய்வதால் தீப்புண்களை அவை ஏற்படுத்துவதில்லை.
கட்டுக்கதை-4: லேசர் மருத்துவம் மிகவும் செலவு பிடிக்கும் ஒரு மருத்துவம் ஆகும்
இல்லவே இல்லை. லேசர் பல் மருத்துவத்தில் ஒரு சிகிச்சைக்கு உள்ள முறைகள் குறைவதாலும், சில சிகிச்சையில் ஏற்படும் தொற்று வாய்ப்புகள் மிகவும் குறைந்து போவதாலும், கூட்டிக் கழித்துப் பார்த்தால் மருத்துவ செலவு அநேகமாக ஒன்றாகத் தான் இருக்கும். செலவைப் பொறுத்த வரை ஒன்று தான் என்றாலும், மருத்துவ தரம் என்று வந்துவிட்டால் லேசர் பல் மருத்துவம் வழக்கமான மருத்துவ முறையை ஒப்பிட்டுப் பார்த்தால் தரம் உயர்வு என்று தான் சொல்லவேண்டும்.