விழுந்த பற்கள் இருந்த இடத்தில் போடப்படும் பல் பதியம் சிறு துளையிட்டு செய்யப்படும் ஒரு முறை ஆகும். இப்படி போடப்படும் பல் பதியங்களைப்பற்றி பலருக்கு அறியாத சில விஷயங்கள் உள்ளன. பல் பதியங்களப் பற்றி இப்படியான ஆறு விஷயங்களை நாம் தெரிந்துக் கொள்வோம்.
பல் பதியங்கள் உறுதியான பொருட்களால் ஆனவை
ஆம். பல் பதியங்கள் உறுதியான டைட்டானியம் என்ற தனிமப் பொருளால் ஆனவை. இந்த தனிமத்தில் செய்யப்படும் எந்த பொருளும் மிக மிக உறுதித்தன்மை வாய்ந்தவை ஆகும்.
பல் பதியங்கள் பார்ப்பதற்கு இயற்கை பற்களைப் போன்றே தோற்றம் அளிப்பவை
இதுவும் உண்மையே. வடிவத்திலும், உறுதியிலும், பல் பதியங்கள் உண்மையான பல்லை ஒத்தே இருக்கின்றன.
பல் பதியங்கள் பல் சொத்தையால் பாதிக்கப்படுவதில்லை
இது நூற்றுக்கு நூறு உண்மை. பல் பதியங்கள் செயற்கையான பொருட்களால் ஆனவை. அதனால் இவற்றை பாக்டீரியா போன்ற நுண் கிருமிகள் அழிப்பதில்லை. ஆனால் உங்களுக்கு பல் பதியங்கள் இருக்கும் பட்சத்தில் நீங்கள் இதனால் பல் துலக்குவது தேவை இல்லை என்று எண்ண வேண்டாம். கண்டிப்பாக பல் பதியங்கள் இருந்தாலும் வாய் சுகாதாரத்தை பேணிப் பாதுக்காக்க வேண்டும். அப்படி வாய் சுகாதாரத்தை காக்கவில்லை என்றால், உங்கள் ஈறுகள் பாதிப்படைந்து அதனால் பல் பதியங்கள் விழுந்து போவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.
பல் பதியங்கள் உணவை நன்றாக மெல்ல வழிசெய்கின்றன
உங்களுக்கு பற்கள் விழுந்திருந்தால் பல் பதியங்கள் வைத்துக்கொள்ள இந்த காரணி நேர்மறையான காரணங்களில் ஒன்றாகும். அவை பற்களின் ஸ்திரத்தன்மையை மட்டுமில்லாமல், உணவை நன்றாக மென்று, செரிக்க மிகவும் உதவி புரிகிறது.
தாடை எலும்புகளின் தேய்மானத்தை பல் பதியங்கள் தடுக்கின்றன
இருப்பதிலேயே முக்கியமான நல்ல விஷயம் இது தான். பல் பதியங்களில் காணப்படும் கீழ்பகுதி வேரைப் போன்ற பிடிமானத்தை அளிக்கிறது. அவை தாடை எலும்பில் துளையிட்டு வைக்கப்பட்டு, நாளடைவில் தாடை எலும்போடு ஒட்டி கலந்துவிடுகிறது. இது இயற்கையான பல்லை போன்றே செயல்பட்டு தாடை எலும்புகள் மேலும் தேயாமல் காப்பாற்றுகின்றன. ஆக பல் பதியங்கள் இடப்பட்டால் தாடை எலும்புகள் மேலும் தேய்வதில்லை என்பது உண்மையே.
பல் பதியங்கள் அருகாமை பற்களை காக்கின்றன
உண்மைதான். பல் பதியங்கள் பக்கத்து பற்களுக்கு வாய்த்த அதிர்ஷ்டம் தான். ஏனென்றால் பல் விழுந்தால் ஏற்படும் ஓட்டையானது பக்கத்து பற்களை மெல்ல தன்னுள் சாய்க்கும். இது பிடிமானம் இல்லாத காரணத்தால் ஏற்படும் ஒரு நிலை. அதனால் தான் ஒரு பல் விழுந்தால் பக்கத்து பற்களும் மெல்ல விழுவதை காண முடிகிறது. இப்படி இல்லாமல் விழுந்த பற்களால் ஏற்படும் ஓட்டையை பல் பதியங்கள் கொண்டு நிரப்பி விட்டால் பக்கத்து பற்கள் பாதிப்பில் இருந்து தப்புகின்றன.